13.11.1948 - குடிஅரசிலிருந்து...
ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப்பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்குபவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?
எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.
இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடையஇந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.