பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் (11)

துரியோதனன்

அரண்மனையில் ஒரு நாள் தன் கணவனின் நண்பன் கர்ணனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள். துரியோதனன் வருவதைப் பார்த்துவிட்டாள். எழுந்தாள் மரியாதை காரணமாக. தோற்றுப் போவதை உணர்ந்து எழுந்து போவதாக எடுத்துக் கொண்டான் கர்ணன்.

துரியோதனன் வரும் திசையைப் பார்க்க இயலாத திசையில் அவன் இருந்தான். “எங்கே ஓடுகிறாய்?’’ என்றவாறு எட்டிப் பிடித்தான். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து முத்துக்கள் சிதறிவிட்டன.

அருகில் துரியோதனன் வந்துவிட்டான். இதனைக் கண்டுவிட்டான். கர்ணன் பயந்துவிட்டான்.

கலகலவெனச் சிரித்துக்கொண்டே, இருவரையும் பார்த்த துரியோதனன், “எடுக்கவோ, கோக்கவோ’’ என்று கேட்டான்.

தன் மனைவியை அவன் அறிவான். தன் நண்பனையும் அவன் அறிந்தவன். அதனால் அப்படிக் கேட்டான். பெருந்தன்மையானவன்.

பிரிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்த மன்னனாகி விட்டவன் தர்மன். அசுவமேத யாகம் செய்து மாமன்னனாக முடிசூட்டப்பட்டவன். ஆனாலும், மகா சூதாடி, சூதாடுதல் சத்திரிய தர்மம்.

சூதாட அவனை அழைக்கவே சகுனியுடன் ஆடினான். அனைத்தையும் தோற்றான் தர்மன். நிபந்தனைப்படி வனவாசம், அஞ்ஞாத வாசம் தொடர்ந்தது.

திருதராஷ்டிரனின் மக்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. பாஞ்சாலியின் அடக்கமற்ற தன்மைக்கும் ஆணவத்திற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் மகிழ்ச்சி.

யாகத்திற்கு அழைக்கப்பட்ட துரியோதனன் ஒரு மன்னன். தர்மன் வகையறாவின் விருந்தாளி. அவனைக் கேவலப்படுத்திய கெடுமதி கொண்டவள் பாஞ்சாலி. தனக்குப் பார்த்திருந்த சுபத்திரையை கிருஷ்ணன் சூதாக அர்ச்சுனனுக்கு மணம் முடித்துவிட்டான். இப்போது கிருட்டிணனின் மகன் சம்பா தன் மகள் இலட்சுமணியை விரும்புவதை அறிந்த துரியோதனன் கோபப்பட்டான். மறுத்தான்.

அப்பனைப் போலவே, சம்பா இலட்சுமணியை அடைய துரியோதனனின் அரண்மனைக்குள் நுழைந்தான். காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

இதை அறிந்த கிருஷ்ணனின் அண்ணனும் துரியோதனனின் நண்பனுமான பலராமன் துடித்தான்.

துரியோதனன் கைதி சம்பாவை விடுதலை செய்து பலராமனின் நட்பைத் தக்கவைத்துக் கொண்டான். தன் மகளைக் கட்டிக் கொடுத்து கிருஷ்ணனின் ஊருக்கு அனுப்பி வைத்தான்.

பெண்மைக்கும், பெண் மனதுக்கும் மரியாதை தந்தவன். கிருஷ்ணன் போல பெண் லோலன் அல்லன். பாரதப் போரில் தன் தம்பியர் 99 பேரையும் இழந்துவிட்ட நிலையில் தன் உடல் காயங்களைக் கழுவிக் கொள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த தர்மன், துரியோதனனை சண்டையிட அழைத்தான்.

“எனக்கு நாடு வேண்டாம். மணிமுடி வேண்டாம். அனைவரையும் இழந்திருக்கும் எனக்கு எதுவும் வேண்டாம். நீயே எடுத்துக்கொள்’’ என்றே கூறிவிட்டான்.

தர்மன் ஏற்கவில்லை. வலுச் சண்டைக்கு இழுத்தான். “பீமனோடு சண்டை போடு’’ என்கிறான்.

ஜாதி தர்மம் மீண்டும். சண்டையிட சத்திரியன் தயங்கவோ மறுக்கவோ கூடாது. போட்டனர். இரு துடைகளுக்கிடையில் பீமன் தாக்கித் துரியோதனனைக் கொன்றான். காரியம்தான் பீமன். காரணம் கிருஷ்ணன்.

போருக்கு முன்பு தன் தாய் காந்தாரியிடம் ஆசி வாங்க ஆசைப்பட்டான் துரியோதனன்.

குருடனைக் கட்டிக் கொண்டதால், தன் கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவள் காந்தாரி. துரியோதனனைப் பார்க்க வேண்டும் என்று வரச் சொல்கிறாள். குளித்துவிட்டு அம்மணமாக வா என்கிறாள். அவனும் அப்படியே வந்தான்.

அந்த நேரத்தில் அங்கு வந்த கிருஷ்ணன் துரியோதனனைக் கேலி பேசுகிறான். தாய் என்றாலும்கூட, வளர்ந்த மகன் இப்படிப் போகலாமா என்கிறான். வெட்கப்பட்ட துரியோதனன் வாழை இலையால் தன் பிறப்பு உறுப்பை மறைத்துக்கொண்டு அம்மாவின் முன் நின்றான். கட்டப்பட்ட கண்களைப் பல வருடங்களுக்குப் பிறகு திறந்து பார்த்தாள். அவளின் பார்வை பட்ட உடல் பகுதிகளை எந்த ஆயுதமும் எதுவும் செய்ய முடியாதாம். எனவே அம்மணமாக வரச் செய்தாள்.

வாழையிலையால் மறைக்கப்பட்ட ஆண் குறிப் பகுதியைத் தவிர மற்றவற்றைக் காந்தாரி பார்த்தாள். அவை வன்மை பெற்றன.

பார்க்காத பகுதி பலவீனப்பட்ட பகுதி, அங்கே தாக்கும்படி பீமனுக்குச் சொன்னான் கபடனான கிருஷ்ணன். பீமன் செய்தான். துரியோதனன் இறந்துபட்டான். பீமன் செய்தது யுத்த தர்மமா? தர்மமாவது ஒன்றாவது. பாரதக் கதையில் ஒரே தர்மம்தான். வர்ண தர்மம். ஜாதி தர்மம். துரியோதனனின் உயிர் பிரியாத நிலையில் துரோணன் மகன் அஸ்வத்தாமன் வருகிறான். தன் தந்தையைக் கொன்ற திட்டத்துய்மனைத்  தான் கொன்றுவிட்டதைச் சொல்கிறான். பாண்டவர்களின் பிள்ளைகளை _ உப பாண்டவர்களைக் கொன்றதைக் கூறுகிறான்.

தனது எதிரிகள் பூண்டற்றுப் போனதைக் கேட்டால் பூரிப்படைவான் துரியோதனன் என்று சொன்னால்... பார்ப்பனர்கள் பாதகம் செய்ய மாட்டார்களே, நீங்கள் எப்படிச் செய்தீர்கள் இப்படி என்று கேட்டான் அவன்.

“பாதகம் செய்கை பார்ப்பன மக்களுக்கு

ஏதம் ஏதம் இது என் செய்தவாறெனா...”

என்று கேட்டான் என்கிறார் பாரதம் பாடியவர்.

“சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று

என்ன வீரியம் என்னினைந்து என் செய்தாய்”

என்றும் கேட்டானாம்.

இந்தப் பாவத்தைக் கழுவிட தவம் செய்க என்று அறிவுரை கூறினான். அறவுரை பேசிய துரியோதனன். இத்தகைய நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன். அதனால்தான்,

“அரமடநல்லார் பலர் அள்ளி கொண்டெதிர் கொள அமரனான பின்

உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே’’ என்கிறான் பாரதம் பாடிய வில்லிபுத்தூரான். (பாரதம் _ ரவுப்திக பருவம் பாடல் 235)

தர்மன் பொய் சொல்லி நரகம் போகிறான். துரியோதனன் நற்செயல்களால் சொர்க்கம் போகிறான்.

பின்பற்றத் தகுந்தவன் எவன்?

நரகத்தில் தண்டனைக் காலம் முடிந்து சொர்க்கம் வந்த தர்மன் கண்ட காட்சி...

துரியோதனன் ஆசனத்தில்... அவன் தோளில் பாரிஜாத மலர்மாலை... அவன்மேல் பூமாரி... அழகிகள் வீணை வாசிக்க... சிலர் தேவாமிர்தத்தை ஊட்டிட... 99 தம்பிகளும் உடன் இருந்திட... மகிழ்வுடன்....

சோ.ராமசாமி எழுதினார்:... அஞ்சாமல் யுத்தத்தைச் சந்தித்து போர் என்ற அந்த வேள்வியில் தன்னையே அர்ப்பணம் செய்து கொண்ட துரியோதனன், சத்திரிய தர்மத்தின் காரணமாக நற்கதி அடைந்து இங்கே வந்திருக்கிறான்.’’ (மகாபாரதம் மிமி பக்கம் 1268)

பாரதம் வற்புறுத்துவது ஜாதி தர்மத்தையே.

ஜாதி தர்மத்தை வலியுறுத்திட நடந்த பாரதக் கதைப் போரில் இறந்தோர் ஒரு கோடியே இருபது லட்சம் பேராம். போர் முடிவில் இருந்தோர் 24 ஆயிரம் வீரர்கள் மட்டுமே. போரின் முடிவு அஸ்தினாபுரத்தில் ஒரு கோடிப் பேருக்கு மேற்பட்ட பெண்கள் தாலி இழந்தனர். விதவைகள் ஆயினர்.

இது தேவையா? ஜாதி முறைக்கு வலுசேர்க்க... பாரதக் கதையா? பாதகக் கதையா?

ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்ட கதையில் அறிவிக்கப்படும் நீதி அபத்தம் அல்லவா?

வியாசன் பாடியது 8800 பாடல்கள். வைசம்பாயன் அதை 24 ஆயிரமாக்கினான். பாரதம் என்று பெயரிட்டான். சூதன் என்பான் இலட்சம் பாடல்களாக்கிவிட்டான். மகாபாரதம் என்றான்.

இதில் இடைச் செருகல் கீதை. 700 பாடல்கள். எழுதியவன் எவன் என்று தெரியவில்லை.

ஆனால், மொத்தமும் ஜாதியை வளர்க்கவே.

(தொடரும்...)

- சு.அறிவுக்கரசு

- உண்மை இதழ், 1-15.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக